Welcome to my blog :)

rss

Saturday, June 5, 2010

இனி, மின்மினி எபிசொட் 4

கோவை

மின்மினி முதல் விநாடியில் அதிர்ந்து, இரண்டாவது விநாடியில் வியர்த்து, மூன்றாவது விநாடியில் இருதயத்தின் மையத்தில் நொறுங்கிப் போனாள். ரத்தம் சூடாகி, மூளை தகித்தது.
'என்ன சொன்னார்?', 'ராங் நம்பரா?', 'பேசியது அவர்தானா... இல்லை, வேறு யாராவதா?'
பெல்லாரி மல்லய்யா மின்மினியின் முகமாற் றத்தைக் கவனித்துவிட்டுக் கேட்டார்... ''என்னம்மா, ஏன் ஒரு மாதிரியாயிட்டே?''
''அ... அ... அது... ஒண்ணுமில்லீங்கய்யா. நம்பர் தப்பாப் போட்டுட்டேன் போலிருக்கு.''
''நீ ரொம்பவும் டென்ஷனாத் தெரியறே! பார்த்து டயல் பண்ணும்மா!''
மின்மினியின் உதடுகள் ஈரம் இல்லாமல் பேப்பர்தாளாக உலர்ந்துபோய் இருக்க, லேசான கை நடுக் கத்தோடு அதே எண்களை மறுபடியும் செல்போனில் ஒற்றி எடுத்தாள். மறுமுனையில் ரிங்டோன் போயிற்று. தொடர்ந்து பங்கஜ்குமாரின் குரல்... ''சொல்லு மின்மினி!''
''ஒரு நிமிஷம்'' என்றவள், மல்லய்யாவைப் பார்த்து, ''உள்ளேயிருந்து பேசினா சரியா டவர் எடுக்கலை. சிட் அவுட் பக்கமாகப் போய் பேசிட்டு வந்துடறேன்யா!''
''சரிம்மா!''
மின்மினி ஹாலைக் கடந்து, தோட்டத்துப் பக்கம் இருந்த சிட்-அவுட்டை நோக்கிப் போனாள். உதட்டுக்கு செல்போனைக் கொடுத்தாள். குரலைச் சற்றே உயர்த்தி, ''என்னங்க...''
''சொல்லு...''
''ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி உங்களுக்கு நான் போன் பண்ணிப் பேசினபோது எதுக்காக 'ராங் நம்பர்'னு சொன்னீங்க?''
''மின்மினி! நான் இப்போ ஒரு முக்கியமான மீட் டிங்கில் இருக்கேன். ஒரு விவகாரமான பிரச்னை யைப் பத்திப் பேசிட்டு இருக்கும்போதுதான் உன்னோட போன் வந்தது. பட், டிஸ்ப்ளேயில் உன் பேர் வரலை. நீ பேசினதும் சரியாக் கேட்கலை. அதான், 'ராங் நம்பர்'னு சொல்லிட்டேன்.''
''இதுதான் உண்மைன்னா நான் நம்பறேன்.''
''சரி! சாயந்திரம் வந்து எல்லாத்தையும் பேசிக் கலாம். நான் இப்போ மீட்டிங்கை விட்டு வெளியே வந்து பேசிட்டு இருக்கேன். நான் மறுபடியும் உள்ளே போகணும்!''
''என்னது... சாயந்திரம் வர்றீங்களா?''
''ஆமா.''
''மத்தியானம் லஞ்ச்சுக்கு வர்றதா சொல்லி இருந்தீங்களே?''
''ஸாரி மின்மினி! இன்னிக்கு லஞ்ச்சுக்கு வர முடியும்னு எனக்குத் தோணலை. மீட்டிங் முடிய ரொம்ப நேரமாகும்னு நினைக்கிறேன்.''
''ரொம்ப நேரம்னா எவ்வளவு?''
''எப்படியும் மூணு மணியாயிடும்.''
''கலெக்டர் சார்! இன்னிக்கு நீங்களும் சரி இல்லை... உங்க பேச்சும் சரியில்லை. என்னாச்சு உங்களுக்கு?''
''பிரச்னை அப்படி!''
''அப்படி என்ன பெரிய பிரச்னை?''
''சொன்னா உனக்குப் புரியாது!''
''சரி! இன்னிக்கு நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்திருக்கார். உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார். யாருன்னு கெஸ் பண்ணுங்க பார்க்க லாம்.''
''அதுக்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை. நீயே சொல்லிடு.''
''இன்னிக்கு நீங்க சுத்தமா அவுட் ஆஃப் ஆர்டர்! 'நீயா பேசுவது... என் அன்பே, நீயா பேசுவது'ன்னு ஹை பிட்ச்ல கத்திப் பாடணும் போலிருக்கு.''
பங்கஜ்குமாரின் குரல் உயர்ந்தது... ''இதோ பார் மின்மினி! உன்னோடு அரட்டையடிச்சுட்டு இருக்க இது நேரம் கிடையாது. நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்ட் யாரு?''
கணவரின் குரலில் கடுமை கலந்து ஒலித்ததை அறிந்ததும், மின்மினி சீரியஸானாள். சொன் னாள்... ''என்னோட குருநாதர் பெல்லாரி மல்லய்யா.''
மறுமுனையில் சிறு மௌன இடைவெளிக்குப் பின்பு... ''எப்ப வந்தார்?''
''அவர் வந்ததுக்கான சந்தோஷம் உங்க குரல்ல மிஸ்ஸிங்! எப்ப வந்தார்னு நீங்க கேக்கி றது ஏன் வந்தார்னு கேக்கிற மாதிரி இருக்கு.''
''நான் எது பேசினாலும் உனக்குத் தப்பாப் படுது! நானே அவரைப் பார்க்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.''
''ந...ம்...ப... முடியவில்லை... இல்லை..!''
''நிஜமாத்தான்!''
''அப்படின்னா லஞ்ச்சுக்கு வாங்க.''
''அது முடியாது. அவர் பக்கத்துல இருக் காரா?''
''நான் சிட்-அவுட்ல இருக்கேன். அவர் ஹால்ல ஏதோ புக் படிச்சிட்டு இருக் கார்.''
''நான் பேசணும். செல்போனை அவர்கிட்ட குடு.''
''இப்பத்தான் நீங்க கொஞ்சம் இளகி, திருநெல்வேலி அல்வா பதத்துக்கு வந்திருக் கீங்க...''- சொன்ன மின்மினி, வேகவேகமாக ஹாலை நோக்கிப் போனாள். சோபாவுக்குச் சாய்ந்து புத்தகத்தைப் புரட்டிக்கொண்டு இருந்த மல்லய்யா நிமிர்ந்தார்.
''என்னம்மா?''
''மாப்பிள்ளை உங்ககிட்டே பேசணு மாம்.''
''ரொம்ப சந்தோஷம்!'' - சொன்ன மல்லய்யா, செல்போனை வாங்கி, வலது காதுக்கு ஏற்றினார்.
''வணக்கம் மாப்பிள்ளை!''
''நான் உங்களுக்குப் பதில் வணக்கம் சொல்லக்கூடிய மன நிலையில் இல்லை!''
''மா...ப்...பி...ள்...ளை..?!''
''நான் என்ன தப்பு பண்ணினேன்னு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையைக் கொடுத்திருக்கீங்க?''
பெல்லாரி மல்லய்யாவின் கையில் இருந்த செல்போன் உயிருள்ள ஜந்து போல் நடுங்கியது!
நியூயார்க்
தன் முதுகில் யாரோ கை வைத்த உணர்வில், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் விஜேஷ். கன்றுக் குட்டி சைஸில், அட்டைக்கரி நிறத்தில், அந்தக் கறுப்பு நிற நாய் மூச்சிரைத்தபடி இரண்டு கால்களையும் தூக்கியபடி நின்றிருந்தது.
விஜேஷ் சர்வாங்கமும் அதிர்ந்துபோனவனாக ஒரு சின்ன அலறலோடு பின்வாங்க, முன்னால் போய்க்கொண்டு இருந்த ஃப்ளோரா திரும்பிப் பார்த்தாள். அவள் இதழ்க் கோடியில் சட்டென்று ஒரு புன்னகை பிறந்தது.
''ஹாய் ப்ளாக்கி! கம் ஹியர். அவர் நம்ம கெஸ்ட். இப்படி எல்லாம் பின்னாடி ஓடி வந்து தொட்டுப் பயமுறுத்தக் கூடாது.''
ப்ளாக்கி ஒரு துள்ளலோடு அவளை நோக்கித் தாவியது. ஃப்ளோராவின் இரண்டு தோள்களின் மீதும் கால்களைப் பதித்து வைத்துக்கொண்டு, அவளுடைய கன்னங்களை நாக்கால் ஒற்றியது. ''யூ... நாட்டி பாய்!'' என்று அதன் முதுகில் ஒரு அடி போட்டுவிட்டு, விஜேஷை ஏறிட்டாள் ஃப்ளோரா.
''மிஸ்டர் விஜேஷ்! இது இந்த வீட்டு ஓனரின் நாய். பெயர் ப்ளாக்கி. இந்த வீட்டை அவர்கள் காலி செய்துகொண்டு போகும்போது இங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். இது இங்கேயே சுற்றிக்கொண்டு, கிடைத்ததைத் தின்றுவிட்டு, ராத்திரி வேளைகளில் இங்கே வந்து படுத்துக்கொள்ளும். நல்ல அறிவுள்ள நாய். அதற்குப் பிடிக்காதவர்கள் யாராவது இந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் உறுமும்... குரைக் கும். ஆனால், உங்களைப் பார்த்து உறுமவில்லை; குரைக்கவில்லை. ஸோ, ப்ளாக்கிக்கு உங்களைப் பிடித்துவிட்டது என்று அர்த்தம்!''
ப்ளாக்கி இப்போது ஃப்ளோராவை விட்டு விட்டு, விஜேஷைச் சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்தது. அவன் மேல் தாவியது.
''ப்ளாக்கி! டோன்ட் டிஸ்டர்ப். கோ அண்ட் லை தேர்!'' - ஃப்ளோரா அதட்ட... அது காதுகளை மடித்து, வாலைச் சுருட்டிக்கொண்டு வாசற்படிக்கு அருகே இருந்த குரோட்டன்ஸ் தொட்டிக்குப் பக்கத்தில் போய்ச் சுருண்டு படுத்தது.
வீடு ஒரு வேண்டாத நிசப்தத்தில் உறைந்து கிடந்தது. அடித்த காற்றில் குளிர் ஊசி முனை களாக மாறி, உடலின் சதையைத் துளைத்து எலும்பைப் பதம் பார்த்தது. ஃப்ளோரா தன் கையில் இருந்த சாவியை உபயோகப்படுத்தி, மேக்னடிக் லாக்கரைத் திறந்தாள். கதவு வெண்ணெய்க் கட்டியில் இறங்கிய கத்தி போல் மெள்ளப் பின் வாங்க... உள்ளே வீடு சாம்பல் நிற இருட்டில் இருந்தது.
ஃப்ளோரா உள்ளே போய் சுவரில் இருந்த சுவிட்ச்களைத் தேய்க்க... சுவர்களில் ஒளிந்து இருந்த ஷேடோ பல்புகள் மின்சாரம் சாப்பிட்டு உயிர்பெற்றன.
வீடு அவ்வளவு சுத்தமாக இல்லை. தூசி மண்டிய ஃபர்னிச்சர்கள் அடைசலாகத் தெரிய, இரண்டு வெள்ளை எலிகள் விஜேஷ், ஃப்ளோ ராவின் அதிரடி வருகையால் பயந்து போய் தலைதெறிக்க ஓடாமல், 'யார்றா நீங்க?' என்பது போல் சிவப்பான சின்னக் கண்களால் பார்த் தன.
ஃப்ளோரா சொன்னாள்... ''மிஸ்டர் விஜேஷ்! இப்போதைக்கு வீடு பார்க்க இப்படித்தான் இருக்கும். நீங்கள் ஓ.கே. சொல்லி அக்ரிமென்ட் போட்டுவிட்டால், இரண்டே நாட்களில் வீட்டைச் சுத்தப்படுத்தி பெயின்ட்டிங் வேலை பார்த்துவிடலாம். முதலில் உங்களுக்கு இந்த வீடு பிடிக்கவேண்டும்.''
''வீடு ரொம்பவும் பழையதாக இருக்கும் போலிருக்கிறதே! அங்கே பாருங்கள்... பெயின்ட் நார் நாராக உரிந்து தொங்குவதை!''
''வீடு பழையதுதான்... ஆனால், உறுதியானது. நியூயார்க்கின் சிவில் கன்ஸ்ட்ரக்ஷன் டிபார்ட் மென்ட் இந்தக் கட்டடத்தின் உறுதியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, இன்னும் 75 ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும் என்று தரச் சான்றிதழ் கொடுத்து உள்ளது. இந்த வீட்டின் பேரன்ட்டல் டாக்குமென்ட்ஸை உங்களிடம் நான் காட்டும்போது, அந்தத் தரச் சான்றிதழையும் நீங்கள் பார்க்கலாம்...''- ஃப்ளோரா பேசிக் கொண்டே அந்த அறையைக் கடந்து உள்ளே போக, விஜேஷ் பின்தொடர்ந்தான்.
தூசி நெடியோடு மூன்று அறைகள் பார்வைக் குக் கிடைத்தன. ''அது கிச்சன். இது மாஸ்டர் பெட் ரூம். இது ரீடிங் ரூம்.''
ரீடிங் ரூமை எட்டிப் பார்த்தான் விஜேஷ்.உடைந்துபோன கண்ணாடி ஷெல்ஃபில் தாறுமாறாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். ஷெல்ஃபுக்கு மேலே இருந்த சுவரில் வரிசையாக மூன்று போட்டோக்கள் நூலாம்படைகளுக்குப் பின்னால் தெரிந்தன. விஜேஷ் அந்த போட்டோக்களைப் பார்த்துவிட்டு ஃப்ளோராவைப் பார்க்க, அவள் சொன்னாள்...
''முதல் போட்டோவில் இருப்பது இந்த வீட்டின் உரிமையாளர். பெயர் ஆல்பர்ட்ஸன். கே.எஸ்.சி. எனப்படும் கென்னடி விண்வெளி மையத்தில் புரொகிராம் இன்ஜினீயராகப் பணிபுரிந்து ரிட்டை யரானவர். பிறகு, ஒரு ஸ்பேஸ்க்ராஃப்ட் கல்லூரியில் விரிவுரையாளராக இரண்டு வருட காலம் பணி புரிந்தார். பிறகு, பார்வையில் குறை ஏற்பட்டதால், அந்த வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு, வீட்டில் ஓய்வாக இருக்க ஆரம்பித்தார். இரண்டா வது போட்டோவில் இருப்பது அவருடைய மனைவி. பெயர் எமிலி. ஹவுஸ் ஒய்ஃப். இருதய நோயாளி. இந்த 55 வயதுக்குள் இரண்டு தடவை பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர். மூன்றாவது போட்டோவில் இருப்பது அவர்களுடைய மகள். பெயர் சில்வியா.''
விஜேஷ் அந்த போட்டோக்களைப் பார்த்துவிட்டு, ஃப்ளோராவை ஒரு புன்னகையோடு பார்த்தான். ''நான் ஒரு கேள்வி கேட்டால், நீங்கள் தப்பாக நினைத்துக்கொள்ள மாட்டீர்களே, ஃப்ளோரா?''
''நீங்கள் தப்பான கேள்வியைக் கேட்டாலும்கூட நான் தப்பாக நினைத்துக்கொள்ள மாட்டேன். கேளுங்கள்.''
''போட்டோக்களில் ஆல்பர்ட்ஸனும் அவருடைய மனைவி எமிலியும் அழகான தோற்றத்தோடுகாணப் படுகிறார்கள். ஆனால், அவர்களுடைய மகள் அழகாக இல்லை. சற்றே தூக்கலான பல் வரிசையும், மேடிட்ட நெற்றியும், சிறிய கண்களும் அவளை ஒரு சராசரி அழகுக்கும் கீழே கொண்டுபோய் விட்டதே?''
''உண்மைதான்! ஆனால் சில்வியா, தான் அழ காக இல்லையே என்று ஒருநாள்கூட வருத்தப்பட்டது கிடையாது. என்னதான் படித்தாலும், பெரிய பெரிய கம்பெனிகளில் தனக்கு வேலை கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்ட சில்வியா, ஆண்கள் படிக்க விரும்பும் படிப்பான ஆட்டோமொபைல் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட படிப்பைப் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து 'AAA' என்ற அமைப்பில் வேலைக்கும் சேர்ந்துவிட்டாள்.''
''அது என்ன கிகிகி?''
''அமெரிக்கன் ஆட்டோமொபைல் அசோஸி யேஷன். அமெரிக்காவில் கார் வைத்திருப்பவர் களுக்குப் பயணத்தின்போது தேவைப்படும் அவசர உதவிகளைச் செய்வதற்காகவே சில கம்பெனிகள் செயல்படுகின்றன. அப்படிப்பட்ட கம்பெனிகளில் ஒன்றுதான் கிகிகி. வழியில் பெட்ரோல் தீர்ந்துவிட் டால், டயர் பஞ்சர் ஆகிவிட்டால், கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், ஜஸ்ட் ஒரு போன்கால் போதும்... உடனே ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார்கள். சில்வியா ஒரு நல்ல கார் மெக்கானிக். பழுதுபட்ட காரை ஒரு சில நிமிடங்களில் சரி செய்துவிடு வாள்.''
விஜேஷ், சில்வியாவின் போட்டோவை மறுபடி யும் பார்த்துவிட்டு ஃப்ளோராவிடம் திரும்பிய வன்,
''இப்போது சில்வியா எனக்குப் பேரழகியாகத் தெரிகிறாள். அவளை நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையும் மனசுக்குள்ளிருந்து லேசாக எட்டிப் பார்க்கிறது.''
''அந்த ஆசையின் தலை மேல் ஒரு தட்டுத் தட்டி அடக்கிவையுங்கள். அவளை நீங்கள் பார்க்க முடி யாது.''
''ஏன்?''
''பார்க்கும்படியான நிலைமையில் அவள் இல்லை.''
''எனக்குப் புரியவில்லை.''
''விட மாட்டீர்களே! அவள் இப்போது இருப்பது நியூஜெர்ஸியில் இருக்கும் மனநல மருத்துவ மனையில்.''
''ம... மனநல மருத்துவமனையா..?''
''யெஸ்...''''என்னாயிற்று?''
''டாக்டர்களுக்கே இன்னமும் பிடிபடவில்லை. அவளைக் குணப்படுத்த பெரிய தொகையைச் செலவழிக்க வேண்டியிருக்கும் என்று டாக்டர்கள் சொன்னதால்தான் ஆல்பர்ட்ஸனும் எமிலியும் இந்த வீட்டை விற்கவேண்டிய நிலைமைக்கு வந்துள்ளனர். இந்த வீட்டை நீங்கள் வாங்கிக் கொண்டால், அது அவர்களுக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும்.''
விஜேஷ் திகைத்துக்கொண்டு இருக்கும்போதே... அவனுடைய செல்போன் அழைத்தது. எடுத்து காதுக்கு ஒற்றினான்... ''யெஸ்!''
''ப்ளீஸ்! மறுபடியும் சொல்றேன், அந்த வீட்டை வாங்காதீங்க!''-
மறுமுனையில் காமாட்சியின் குரல்!