Welcome to my blog :)

rss

Sunday, April 4, 2010

இனி, மின்மினி Episode 1

Thanks, Ananda Vikatan

நியூயார்க்

நியூயார்க் விமான நிலையத்தில் விமானம் இறங்கிக்கொண்டு இருந்தபோது காலை 7 மணி. சூரியன் பனிப் போர்வைக்குள் சிக்கி, பட்டர் தாளில் சுற்றப்பட்ட ஆப்பிள் போலத் தெரிய... கோலப் பொடியைத் தூவும் தினுசில் பனி மழை.

விஜேஷ் கெடுபிடியான கஸ்டம்ஸை முடித்துக்கொண்டு லவுஞ்சுக்குள் நுழைந்தபோது, அந்த அழகான பெண் பொன்னிற முடியும், கோபால்ட் நீல நிறக் கண்களுமாக விஜேஷை எதிர்கொண்டாள். கையில் அரை அடி உயரத்தில் ஒரு மினி பொக்கே.

''வெல்கம் விஜேஷ்!''

''யூ... யூ... ஃப்ளோரா?''

''யெஸ்!''

விஜேஷ் ஒரு புன்னகையை உதட்டில் நிறுத்தி ஆங்கிலத்தில் ஆச்சர்யப்பட்டான். ''என் நண்பன் ஃப்ரெட்ரிக்குக்கு இப்படி ஓர் அழகான தங்கை இருப்பாள் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை.''

ஃப்ளோரா சிரித்தாள். வாய்க்குள் இருந்து ஒரு முத்துச்சரம் வெளிப்பட்டு, எனக்கு என்ன விலை கொடுக்கலாம் என்று கேட்டது.

''பயணம் எப்படி இருந்தது?''

''போர்! எந்த ஏர் ஹோஸ்டஸ்சும் பார்க்கும்படி இல்லை. உணவும் சரி இல்லை. பெயர் தெரியாத ஏதோ ஒரு திரவத்தில் ஊறிய வெள்ளரிக்காய்த் துண்டுகளும், வெண்ணெய் தடவாத காய்ந்த ரொட்டிகளையும் கொடுத்தால், அது எப்படி வயிற்றுக்குள் போகும்?''

ஃப்ளோரா மறுபடியும் முத்துச்சரத்தைக் காட்டினாள். 'ஓல்ட் வெஸ்ட்ப்யூரி'க்குப் போகும் வழியில் ஒரு நல்ல இண்டியன் ரெஸ்டாரன்ட் இருக்கிறது.''

''வேண்டாம்... வேண்டாம்! இப்போது பசி இல்லை. என் ஆர்வம் எல்லாம் இப்போது எதில் தெரியுமா? நான் வாங்கப்போகும் அந்த வீட்டைப்பற்றித்தான். இன்றைக்கே நான் வீட்டைப் பார்த்து முடிவு செய்ய வேண்டும் ஃப்ளோரா.''

''கவலைப்படாதீர்கள் மிஸ்டர் விஜேஷ். என் வீட்டுக்குப் போகும் வழியில் தான் அந்த வீடு இருக்கிறது. கொஞ்சம் அமைதியான சூழ்நிலையில் அமைந்த பழங்கால வீடுதான் என்றாலும், உறுதியான வீடு. விலையைப்பற்றிக் கவலைப் பட வேண்டாம். ஏனென்றால், நான் ஒரு லாயர் என்கிற முறையில் அந்த வீட்டை விற்பதற்கான முழு உரிமையும் என்னிடம்தான் உள்ளது.''

''அந்தத் தைரியத்தில்தான் பாரீஸில் இருந்து புறப்பட்டு வந்திருக்கிறேன்!''

இருவரும் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தார்கள். ஃப்ளோரா தன்னுடைய பென்ஸ் காரை பார்க்கிங் வரிசையில் இருந்து உருவிக்கொண்டாள். விஜேஷ் தன் கையில் இருந்த சூட்கேஸை டிக்கியில் வைத்துவிட்டு, ஃப்ளோராவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். காரின் ஏ.சி. காற்றில் பெர்ஃப்யூம் மணத்தது.


காரை விரட்டினாள் ஃப்ளோரா. ரோட்டின் நான்கு டிராக்குகளில் அதிவேக டிராக்கைத் தேர்ந்தெடுத்தாள். 140 மைல் வேகத்தில் பென்ஸ் வீல்கள் சுழன்றன.

ஃப்ளோரா கேட்டாள்... ''நியூயார்க்குக்கு முதல்தடவை வருகிறீர்கள். உங்கள் பார்வையில் நியூயார்க் எப்படி?''

''மகா அழுக்கு! இப்படி ஓர் அழுக்கான நகரத்தை இந்தியாவில்கூடப் பார்க்க முடியாது. விமானத்தில் இருந்து கீழே இறங்கியவுடனே எனக்குப் பெரிய ஏமாற்றம். நம்முடைய ஷூவில் உள்ள தூசி பட்டு நியூயார்க் விமான நிலையத்தின் தரை அழுக்காகிவிடுமோ என்று விமானத்தில் இருந்தபோது நான் கற்பனை செய்திருந்தேன். ஆனால், விமான நிலையத்தில் இறங்கியபோது, அங்கு இருந்த அழுக்கு பட்டு என் ஷூ விணாகிவிடக் கூடாதேன்னு கவலைப்பட்டேன். விமான நிலையம் மட்டும்தான் அழுக்கு என்று நினைத்தேன். அதைவிட, நகரம் ரொம்பவும் மோசம். பாருங்கள், ரோட்டோரங்களில் எவ்வளவு குப்பைகள்?''

''அதற்குக் காரணம், இங்குள்ள மக்கள்தொகை. அது தவிர, நீக்ரோக்களின்...'' என்று ஃப்ளோரா பேசிக்கொண்டு இருக்கும்போதே விஜேஷின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.

''எக்ஸ்கியூஸ்மீ ஃப்ளோரா'' என்று சொல்லி, செல்போனை எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தான். ஒரு நம்பர்.

குரல் கொடுத்தான்.

''யெஸ்...''

''பேசறது விஜேஷா?''- ஒரு பெண் குரல் கேட்டது. நல்ல தமிழ்.

''ஆமா...''

''நீங்க பாரீஸில் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கறீங்க இல்லையா?''

''நீங்க யாரு?''

''அது கடைசியில்! நான் இப்போ உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும். சொல்லலாமா... வேண்டாமா?''

''சொல்லு...''

''நியூயார்க்ல இப்போ உங்களுக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு முன்னோட்டமாக ஒரு வீட்டைப் பார்த்து விலை பேச வந்திருக்கீங்க. சரியா?''

''ரொம்ப சரி!''

''உங்ககூட பாரீஸில் வேலை செய்யற ஃப்ரெட்ரிக்கோட சிஸ்டர் ஃப்ளோரா ஒரு லாயர். அவளோட கஸ்டடியில் இருக்கிற ஒரு பழைய வீட்டை வாங்கலாம்னு உங்களுக்குள்ளே ஓர் எண்ணம். சரியா?''

''சரி!''

''இந்த நிமிஷத்தோடு அந்த எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சுட்டு, பாரிசுக்குப் போக அடுத்த ஃப்ளைட்டைப் பிடிங்க.''

''ஏன், அந்த வீட்டுக்கு என்ன?''

''சொன்னா நம்பணும்...''

''சொல்லு...''

''கடந்த ஆறு மாச காலத்துல அந்த வீட்டை வாங்க முயற்சி பண்ணி, அக்ரிமென்ட் போட்ட ரெண்டு பேர் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. இப்ப நீங்க மூணாவதா வந்திருக்கீங்க. நீங்க இந்தியா. அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்ங்கிற காரணத்துனாலதான் போன் பண்ணிப் பேசிட்டு இருக்கேன்.''

''சரி! மொதல்ல நீ யார்னு சொல்லு!''

''என் பேர் காமாட்சி.''

''ஊரு?''

''காஞ்சிபுரம்.''

கோவை

மாவட்ட ஆட்சியர் அலுவலகம். காலை 11 மணி. மக்கள் ஏகப்பட்ட பிரச்னைகளோடு வரிசைகளில் காத்துக்கொண்டு இருக்க... கலெக்டர் பங்கஜ் குமார் ஜீப்பில் இருந்து இறங்கி, வேக வேகமாக உள்ளே போனார். பி.ஏ. எதிர்ப்பட்டார். அவர் விஷ் செய்ததை அலட்சியமாக ஏற்றுக்கொண்டார்.

''ஒரு அஞ்சு நிமிஷம் உள்ளே வாங்க'' என்றார்.

''யெஸ் ஸார்...''

பங்கஜ் குமார் தன் அறைக்குள் நுழைந்து நாற்காலிக்குத் தன் முதுகைக் கொடுத்துக்கொண்டே பி.ஏ-வை ஏறிட்டார். பேச்சில் அனல் பறந்தது. ''சண்முகம்! இது என்ன போலீஸ் ஸ்டேஷனா... இல்லை, கலெக்டர் ஆபீஸா? புருசன் பொஞ்சாதி சண்டை, என் பொண்டாட்டி எவன்கூடவோ ஓடிப் போயிட்டா... தேடிக் கண்டுபிடிச்சுக் குடுங்கன்னு ஒரு கூட்டம், அரிசியில் கல் இருக்கு; தண்ணியில் புழு இருக்குன்னு சொல்லிக்கிட்டு ரோடு மறியல். இந்த மாசத்துல மட்டும் 27 பேர் ஏதேதோ பிரச்னைகளுக்காக மண்ணெண்ணெய் டின்களோடு வந்து தீக்குளிக்கப் போறதா என் ஜீப் முன்னாடி உட்கார்ந்து பாடாய்ப்படுத்திட்டாங்க. இந்தப் பிரச்னைகளை ஏ.சி. உதவியோடு நீங்க பார்த்துக்கக் கூடாதா?''

''சார்... அதுல என்ன பிரச்னைன்னா?''

''நீங்க வழக்கமா சொல்ற எந்த எக்ஸ்பிளனேஷனும் எனக்கு வேண்டியது இல்லை. நான் மாவட்ட நிர்வாகப் பணிகளைக் கவனிப்பேனா? இல்லே... காணாமப் போன பொண்டாட்டிகளைத் தேடி அவனவன் புருஷன்களோடு சேர்த்துவெச்சிட்டு இருப்பேனா. நீங்களே சொல்லுங்க?''

''ஸாரி சார்... இனிமே இது மாதிரியான விஷயங்கள் உங்க மேஜை வரைக்கும் வராம நான் பார்த்துக்கிறேன் சார்!''

''இதையே 100 தடவை சொல்லிட்டீங்க...'' பங்கஜ் குமார் எரிச்சலோடு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அவருடைய செல்போன் அழைத்தது. எடுத்தார். 'விமிழிவிமிழிமி சிகிலிலிமிழிநி' என்று டிஸ்ப்ளே சொன்னது.

பி.ஏ-வைத் திரும்பிப் பார்த்தார்.

''நான் வர்றேன் சார்...'' பி.ஏ. அறையைக் கடந்து போனதும், பங்கஜ் குமார் மலர்ந்த முகமாய் செல்போனைக் காதுக்குப் பொருத்தி, மெதுவாகக் குரல் கொடுத்தார். ''சொல்லு மினி...''

''எனக்குக் காலையில் இருந்து மனசே சரியில்லைங்க.''

''ஏன், என்னாச்சு?''

''ஏதோ போன் வந்ததுன்னு சொல்லி, டிபன்கூடச் சாப்பிடாம அவசர அவசரமாக் கிளம்பிட்டீங்களே? எனக்கும் அதுக்கு அப்புறம் சாப்பிடத் தோணலை. எல்லாத்தையும் தூக்கி வேலைக்காரிக்குக் கொடுத்துட்டேன்.''

''என்னது! நீயும் சாப்பிடலையா? இதோ பார் மினி! நம்ம கல்யாணம் நடக்கிறதுக்கு முந்தி உன்னைப் பெண் பார்க்க வரும்போது, ஒரு அஞ்சு நிமிஷம் தனியா சந்திச்சுப் பேசினோம். அப்ப நான் என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?''

''நல்லா ஞாபகம் இருக்கு.''

''என்ன சொன்னேன்?''

''நான் ஒரு கலெக்டரா இருக்கேன்கிற காரணத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்காதே. மாசத்துல பாதி நாள் கேம்ப் போயிடுவேன். ஜனாதிபதி, பிரதமர்னு யார் வந்தாலும் வீட்டையும் உன்னையும் சுத்தமா மறந்துடுவேன். கலவரம் நடந்தா, அந்தப் பகுதிகளுக்குப் போகணும்... தீவிரவாதிகளோட மிரட்டல்களை எதிர்கொள்ளணும்... இப்படி வரிசையாக ஏதேதோ சொன்ன மாதிரி ஞாபகம். அதை மறுபடியும் ஒரு தடவை ரீ-வைண்ட் பண்ணிப் பார்த்துக்க.''

''சரி... சரி! மத்தியானம் லஞ்ச்சுக்காவது வருவீங்களா... மாட்டீங்களா?''

''இன்னிக்கு மக்களின் குறை தீர்க்கும் நாள். நிறைய மனுக்கள் வரும்... படிச்சுப் பார்த்து உடனடியா முடிவு எடுக்கணும். எவ்வளவு நேரமாகும்னு எனக்கே தெரியாது மினி!''

''நீங்க வரலைன்னா, நான் மத்தியானமும் சாப்பிட மாட்டேன். உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்து இன்னிக்கு 51-வது நாள். இந்த ரெண்டு மாச காலத்துல நாம ரெண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்ட நாட்களை விரல்விட்டு எண்ணிடலாம். நீங்க இன்னிக்கு என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ, எனக்குத் தெரியாது. சாப்பிட வரணும்.''

''இதோ பார் மினி... நான் வரலைன்னு பட்டினி கிடக்காதே. இன்னிக்குச் சாயந்தரம் புரந்தரதாஸ் ஹாலில் உன்னோட கச்சேரி இருக்கு. நீ சாப்பிடாமப் போனா ரெண்டு கீர்த்தனம் பாடறதுக்குள்ளே 'ஃபெய்ன்ட்' ஆயிடுவே!''

''அது உங்களுக்குப் புரிஞ்சா சரி! நான் இன்னிக்கு சபாவில் கச்சேரி பண்ணும்போது, ஒவ்வொரு கீர்த்தனைக்கும் அப்ளாஸ் வாங்கணும்னா... மத்தியானம் லஞ்ச்சுக்கு வரணும்... என்கூட உட்கார்ந்து சாப்பிடணும்!''

''நான் உன்னோட கழுத்துல தாலி கட்டினதே அந்தக் கீர்த்தனைகளோட இனிமைக்காகத்தான். அந்தக் கீர்த்தனைகளை நான் பட்டினி போட விரும்பலை. சரியாய் ஒரு மணிக்கு வந்துடறேன்.''

''தேங்க்யூடா!''

''என்ன சொன்னே?''

''ஸாரிடா...'' மறுமுனையில் மின்மினி ஒரு சிரிப்போடு செல்போனை அணைத்துவிட, பங்கஜ் குமாரும் தனக்குள் பீறிட்ட சிரிப்பை மென்றபடி செல்போனை அணைத்தார்.

கதவுக்கு வெளியே பியூன் அன்றைக்கு வந்த தபால் கட்டோடு நின்றிருப்பது தெரிந்தது. மேஜையின் மேல் இருந்த அழைப்பு மணியைத் தட்டியதும், பியூன் உள்ளே வந்தான். தபால்களை வைத்துக்கொண்டே தயக்கக் குரலில் கூப்பிட்டான்.

''ஐயா...''

''என்ன சாமித்துரை?''

''கடந்த ரெண்டு மூணு நாளா கையில் ஒரு கோரிக்கை மனுவோடு ஒருத்தர் வந்து உங்களைப் பார்க்கிறதுக்காக கால் கடுக்க நிக்கிறார். கோரிக்கை மனுவைப் பெட்டியில் போட்டுட்டுப் போங்கன்னு சொன்னாலும் அவர் கேட்கிறது இல்லை.''

''கோரிக்கை என்னன்னு கேட்டியா?''

''கையில் மனு எழுதிவெச்சிருக்கார் ஐயா.''

''அந்த ஆளை உள்ளே அனுப்பு.''

பியூன் தலையாட்டிவிட்டு வெளியேறிப் போனதும் அடுத்த நிமிடத்தின் ஆரம்பத்தில் அந்தப் பெரியவர் உள்ளே வந்தார். முடி கொட்டிப் போன மண்டை. மோவாயில் கொத்தாக நரை தாடி.

''ஐயா! வணக்கம்...''

பங்கஜ் குமார் நிமிர்ந்தார்.

''உங்களுக்கு என்ன வேணும்?''

''ஐயா! என்னோட கோரிக்கையை ஒரு மனுவா எழுதிக் கொண்டுவந்து இருக்கேன். அதை நீங்க படிச்சு...''

''வேண்டாம்... உங்க கோரிக்கை என்னன்னு வாய்லயே சொல்லுங்க...''

''ஐயா... அது வந்து... என்னோட மருமக இப்ப என்னையும் என் பையனையும் விட்டுட்டு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. சட்டப்படி விவாகரத்தும் ஆகலை. இந்த விஷயத்துல நீங்கதான் எங்களுக்கு உதவி பண்ணணும்!''

பங்கஜ் குமாருக்குள் கோபம் கொப்பளித்துக் கிளம்பியது. ஆத்திரத்தோடு நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழ முயன்றவர், பெரியவரின் கையில் இருந்த போட்டோவைப் பார்த்ததும் தளர்ந்தார்.

''ஐயா! இதுதான் என் மருமகளோட போட்டோ.''

போட்டோவில் மின்மினி!

No comments: