Welcome to my blog :)

rss

Tuesday, April 6, 2010

இனி, மின்மினி Episode 2


கோவை

போட்டோவில் கேமராவை நேர்ப்பார்வை பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு இருந்த மின்மினியைப் பார்த்ததும், பங்கஜ் குமாரின் உடம்பில் இருந்த ஒட்டுமொத்த நரம்பு மண்டலமும் ஓர் அதிர்வுக்கு உட்பட்டு, ரத்தத் தில் வெப்பம் பரவியது. அது மூளைக்குள் போய் குபுகுபுத்தது.

'இது மின்மினிதானா?' - பார்வைக்குக் கூர்மை கொடுத்துக் கண்களைச் சுருக்கிய பங்கஜ்குமாரை பெரியவர் ஒரு கேலிப் புன்னகையோடு ஏறிட்டார். குரலைத் தாழ்த்தி ஏற்ற இறக்கத்தோடு கேட்டார்... ''என்னங்கய்யா... இந்தப் போட்டோவைப் பார்த்ததும் அப்படியே ஆடிப்போயிட்டீங்க..? இந்தப் போட்டோவில் இருக்கிற பெண்ணை உங்களுக்குத் தெரியுமா?''

பெரியவரின் கையில் இருந்த போட்டோவைப் பறித்து, அதையே சில விநாடிகள் வரை வெறித்தார் பங்கஜ்குமார்.

அவருடைய மனைவி மின்மினிதான்! சந்தேகமே இல்லை. வலது கன்னத்தின் கீழ்ப் பகுதியில் ஒட்டியிருந்த அந்தக் கடுகு சைஸ் மச்சமும், சற்றே விரிந்த காதுகளும் அவள் மின்மினிதான் என்று சூடம் ஏற்றி அடிக்காத குறையாகச் சத்தியம் செய்தன. பெரியவரைத் தீப்பார்வை பார்த்தார்.

''இ... இ... இந்த போட்டோ உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது?'' - பங்கஜ்குமார் கோபத்தோடு கேட்ட கேள்விக்குப் பெரியவர் பவ்யமாகி, தன் இரண்டு கைகளையும் மார்புக்குக் குறுக்காகப் பெருக்கல் குறி போட்டுக்கொண்டார்.

''ஐயா! இது என் மருமகளோட போட்டோ. இந்தப் போட்டோ என்கிட்டே இல்லாம வேற யார்கிட்டே இருக்கும்? இந்த போட்டோவைத் தவிர, வேற ஒரு போட்டோவும் இருக்கு. பார்க்கறீங்களா?''-பெரியவர் கேட்டுக்கொண்டே தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அந்த பிரவுன் நிறக் கவரை எடுத்துப் பிரித்தார். போஸ்ட் கார்டு சைஸில் இருந்த போட்டோ ஒன்றை அதிலிருந்து உருவி நீட்டினார், ''ம்... பாருங்க...''

போட்டோவை வாங்கிப் பார்த்த பங்கஜ்குமாருக்கு நெற்றி சட்டென்று வியர்த்து, வாய் உலர்ந்து போனது. அந்த வண்ணப் போட்டோவில் ஒரு சர்ச் பிரதானமாகத் தெரிய, அதன் பின்னணியில் கும்பல் ஒன்று தெரிந்தது. கும்பலின் மையத்தில் பாதிரியார் ஒருவர் வெள்ளை அங்கியில் நின்றிருக்க, அவருக்கு முன்னால் கிறிஸ்துவப் பாரம்பரியத் திருமண உடைகளோடு மின்மினியும் அந்த இளைஞரும் பார்வைக்குக் கிடைத்தார்கள். முகங்களில் பாதரசம் தடவிய மாதிரி பரவசம்.

பெரியவர் சொன்னார், ''ஐயா! அஞ்சு வருஷத்துக்கு முந்தி ஆந்திர மாநிலம் பெல்லாரியில் இருக்கிற ஒரு சர்ச்சில் என்னோட மகன் அல்போன்சுக்கும் மின்மினிக்கும் கல்யாணம் நடந்தபோது எடுத்த போட்டோ இது.''

பெரியவர் சொல்ல, போட்டோவைப் பிடித்து இருந்த பங்கஜ்குமாரின் கை நடுங்கியது. மூளை பிராமிஸ் செய்தது. 'இவள் மின்மினிதான். சந்தேகமே இல்லை!' அடித்துத் துவைத்த துணியாகத் துவண்டுபோன பங்கஜ்குமார் பெரியவரை வியர்த்த முகமாக ஏறிட்டார். ''உங்க மகன் பேர் என்ன சொன்னீங்க?''

''அல்போன்ஸ்.''

''அவர் இப்ப எங்கே?''

''வீட்ல இருக்கான். அவனுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. மின்மினி அவனை விட்டுப் போனதிலிருந்தே பித்துப் பிடிச்சவன் மாதிரி ஆயிட்டான். குடிப் பழக்கத்தினால் ஆரோக்கியம் கெட்டுப்போய்... ஜாண்டிஸ் அட்டாக் ஆகி...''

எரிச்சலான பங்கஜ்குமார் கையமர்த்தினார். ''உங்க பேர் என்ன?''

''மைக்கேல் எர்னஸ்ட்...''

''என்ன பண்றீங்க..?''

''டவுன்ஹால்ல பீஃப் பிரியாணி ஸ்டால் ஒண்ணு நடத்திட்டு வர்றேன்!''

''மின்மினிக்கும் அல்போன்சுக்கும் கல்யாணம் நடந்ததாய்ச் சொன்னீங்க. கல்யாணம் பண்ணிக்கிட்ட அவங்க ஏன் பிரியணும்?''

''கல்யாணம் நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளேயே அவங்க ரெண்டு பேருக் கும் நடுவுல ஏதோ பிரச்னை வந்தது. மின்மினி சண்டை போட்டுக்கிட்டுப் போயிட்டா.''

''என்ன பிரச்னை?''

''அது என்னான்னு எனக்குத் தெரியலீங்கய்யா! என்னோட பையன்கிட்டே கேட்டேன். அவன் சொல்லலை. மின்மினியைத் தனியா சந்திச்சுக் கேட்டேன். அவளும் சொல்லலை. ரெண்டு பேரையும் சேர்த்துவைக்க நான் முயற்சிகள் எடுத்துக்கிட்டு இருக்கும்போதே, மின்மினி பெல்லாரியில் இருந்த தன்னோட வீட்டைக் காலி பண்ணிட்டு, சென்னைக்குப் போயிட்டா. அவ வீட்டைக் காலி பண்ணின விவரம் எனக்கும் என் மகனுக்கும் நாலஞ்சு நாள் கழிச்சுதான் தெரிஞ்சுது. அல்போன்ஸ் இடிஞ்சுபோயிட்டான். நாங்களும் பெல்லாரியில் இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டு, மின்மினியைத் தேடி சென்னைக்குப் போனோம். கடந்த அஞ்சு வருஷ காலமா அவளைத் தேடி அலைஞ்சோம். மின்மினியை எங்களால கண்டுபிடிக்க முடியலை. போன வாரம் 'கொடீசியா' வளாகத்துல ஒரு ஃபங்ஷன் நடந்தப்ப நான் அங்கே இருந்தேன். அந்தச் சமயத்துல நீங்களும் மின்மினியும் அந்த ஃபங்ஷன்ல கலந்துக்கிறதுக்காக ஒரே கார்ல வந்தப்பதான் மின்மினிக்கும் உங்களுக்கும் கல்யாணம் நடந்திருக்கிற விவரம் எனக்குத் தெரிஞ்சுது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. இந்த விஷயம் என் மகனுக்குக்கூடத் தெரியாது. சட்டப்படி மின்மினி என்னோட மருமக. அல்போன்ஸோட மனைவி. நீங்க அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது எந்த வகையில் நியாயம்னு தெரியலை. இந்தப் பிரச்னையை நான் ஒரு மனுவா எழுதிக் கொண்டாந்திருக்கேன். நீங்கதான் இதுக்கு ஒரு தீர்வு சொல்லணும்.''

பங்கஜ்குமார் சில விநாடிகள் கண் மூடி மௌனமாக இருந்துவிட்டு, பெரியவர் மைக்கேல் எர் னஸ்ட்டை ஏறிட்டார். ''உங்களுக்கு ஒரு தீர்வு வேணும். அவ்வளவுதானே?''

''ஆமாங்கய்யா! நான் நினைச்சிருந்தா பத்திரிகைக்கும் டி.வி-க்கும் போய் விஷயத்தைச் சொல்லி, இதைப் பெரிசுபடுத்தியிருக்க முடியும். அப்படி நான் பண்ண விரும்பலை. உங்ககிட்டே இருந்து எனக்கு ஒரு நியாயமான முடிவு கிடைக்கும்கிற நம்பிக்கை யில்தான் உங்களை ரெண்டு நாளாய்ப் பார்க்க முயற்சி எடுத்து, இன்னிக்குப் பார்த்துட்டேன்.''

''இந்த விஷயத்தை வெளியே யார்கிட்டேயும் சொல்லலையே?''

''இல்லீங்கய்யா!''

''சரி... நாளை காலையில் உங்க மகனோடு என் பங்களாவுக்கு வந்துடுங்க. மேற்கொண்டு பேச வேண்டியதை அங்கே வெச்சுப் பேசிக்குவோம்.''

''எத்தனை மணிக்கு வரணுங்கய்யா?''

''ஏழு மணிக்கெல்லாம் வந்துடுங்க.''

''சரிங்கய்யா!''-மைக்கேல் எர்னஸ்ட் கும்பிடு ஒன்றைப் போட்டுவிட்டு, அறையில் இருந்து வெளி யேற, வெளிறிப்போன முகத்தோடு அவருடைய முதுகையே வெறித்தார் கலெக்டர் பங்கஜ்குமார்.

நியூயார்க்

பேர் காமாட்சி, ஊர் காஞ்சிபுரம் என்று சொல்லி செல்போனில் பேசிய அந்தப் பெண்ணுடன் விஜேஷ் மேற்கொண்டு பேச முயல, 'பை' சொல்லி இணைப்பைத் துண்டித்தாள்.

விஜேஷின் முகம் முழுக்கக் குழப்பமும் வியப்பும் பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டு ஸ்லோமோஷனில் பரவியது. அதைக் கவனித்துவிட்டு, காரை ஓட்டிக் கொண்டு இருந்த ஃப்ளோரா கேட்டாள்... ''செல் போனில் பேசியது யார் மிஸ்டர் விஜேஷ்?''

'இவளிடம் சொல்லலாமா, வேண்டாமா' என்று விநாடிகள் யோசித்து, ஆறாவது விநாடியில் வேண்டாம் என்று முடிவு எடுத்து, ''அது... அது... ஒரு ராங் நம்பர்'' என்றான் விஜேஷ்.

''ராங் நம்பரா?''

''ஆமாம்...''

''ஒரு லாயரிடம் பொய் சொல்லக் கூடாது என்பது பொதுவான விதி. உங்களுக்கு வந்தது ராங் நம்பர் இல்லை. சரியான நம்பர்தான். ஆனால், பேசியது மட்டும் ராங் பர்சன். நான் சொல்வது சரியா?''

விஜேஷ் அவளை வியப்பாகப் பார்க்க, அவள் சிரித்தாள். ''உங்களுக்கு வந்தது ராங் நம்பராக இருந்திருந்தால், அந்தப் பேச்சு ஒரு பத்து விநாடிகளுக்குள் முடிந்துபோயிருக்கும். ஆனால், நீங்கள் ஒரு நிமிடம் பேசினீர்கள். அந்த ஒரு நிமிடப் பேச்சு முடிவதற்குள், உங்கள் முகத்தில் ஓராயிரம் முகபாவங்கள். அதிர்ச்சி அலைகள். போனில் ஏதாவது கெட்ட செய்தியா?

''கிட்டத்தட்ட...''

''பேசியது யார்... ஆணா, பெண்ணா?''

''பெண்.''

''என்ன சொன்னாள்?''

விஜேஷ் தயங்க, ஃப்ளோரா சிரித்துக் கண் சிமிட் டினாள். ''என்னைப்பற்றி அந்தப் பெண் ஏதாவது மோசமான முறையில் விமர்சனம் செய்தாளா?''

''இல்லை.''

''பின்னே?''

''என்னை எச்சரிக்கை செய்தாள்.''

''எச்சரிக்கை செய்தாளா?''

''ம்... கடந்த ஆறு மாத காலத்தில் நீங்கள் சொல் லும் அந்த வீட்டை வாங்க அக்ரிமென்ட் போட்ட இரண்டு பேர் அடுத்தடுத்து இறந்துபோய்விட்டார் களாம். 'இப்போது நீங்கள் மூன்றாவது நபராக அந்த வீட்டை வாங்க வந்திருக்கிறீர்கள். இந்த நிமிஷத் தோடு அந்த எண்ணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, பாரீசுக்குப் போக அடுத்த ஃப்ளைட் டைப் பிடியுங்கள்' என்று சொன்னாள்.''

ஃப்ளோராவின் முகம் லேசாக மாறியது. ''நீங்கள் என்ன சொன்னீர்கள் விஜேஷ்?''

''நான் மேற்கொண்டு அவளிடம் பேசுவதற்கு முன்பாக இணைப்பைத் துண்டித்துவிட்டாள். பப்ளிக் பூத்தில் இருந்து பேசியிருக்கிறாள். அவள் ஒரு இந்தி யப் பெண். அதிலும் தமிழ்நாட்டுப் பெண். பெயர் காமாட்சி. ஊர் காஞ்சிபுரம்.

ஃப்ளோரா சில விநாடிகள் வரை மௌனம் காத்து விட்டு, விஜேஷைத் திரும்பிப் பார்த்தாள். ''இப்போது உங்கள் முடிவு என்ன விஜேஷ்? அந்த வீட்டை வாங்கப் போகிறீர்களா, இல்லை அவள் சொன்னது போல அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து, பாரீஸ்போகப்போகிறீர்களா?''

''அந்த காமாட்சி சொன்னது உண்மையா, பொய்யா? நீங்கள் சொல்லும் அந்த வீட்டை இரண்டு பேர் வாங்க முயற்சி செய்து, அடுத்தடுத்து இறந்துபோனது உண்மையா?''

''உண்மைதான்!''

''எப்படி இறந்தார்கள்?''

''ஹார்ட் அட்டாக்! வீட்டை வாங்க வந்த அந்த இரண்டு பேருமே 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒருவர் பெண். மற்றவர் ஆண். பெண்ணின் பெயர் பிரிட்டனி ஜான்சன். ஆணின் பெயர் ஜான் கரோல். முதலில் வீட்டை வாங்க முயற்சி செய்து அக்ரிமென்ட் போட்டவர் பிரிட்டனி ஜான்சன். அவருக்கு ஏற்கெனவே இருதய ஆபரேஷன் நடந்திருக்கிறது. டாக்டர் சொல்லியிருந்த நடைப்பயிற்சி தூரத்தைக் காட்டிலும் அதிக தூரம் நடந்ததால், மாரடைப்பு ஏற்பட்டு மரணம். அதற்குப் பிறகு இரண்டாவதாக அக்ரிமென்ட் போட்டவர் ஜான் கரோல். அவர் பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டவர். குடிகாரர். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் அளவுக்கு மீறிக் குடிப்பவர். ஒரு சனிக் கிழமை இரவு மதுவின் தாக்கம் அதிகமாகி, மாஸிவ் அட்டாக் ஏற்பட்டு மரணம். இரண்டுமே இயற்கையான முறையில் நேர்ந்த மரணங்கள். வீட்டை வாங்க நினைத்ததற்கும் அவர்கள் இறந்து போனதற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இது ஒரு சாதாரண பிரச்னை. இதை யாரோ ஊதிவிட்டுப் பெரிதாக்க நினைக்கிறார்கள்.''

''இதனால் யாருக்கு என்ன லாபம்?''

''அதுதான் எனக்கும் புரியவில்லை. உங்களுக்கு போன் செய்து பயமுறுத்திய காமாட்சி யார் என்று தெரிந்தால்தான் இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கும். ஆனால், மறுபடியும் அந்தக் காமாட்சி உங்களுக்கு போன் செய்ய மாட்டாள். ஏனென்றால், அந்த வீட்டை வாங்க விடாதபடி பயமுறுத்துவது ஒன்றுதான் அவளுடைய நோக்கம். இப்போது நான் உங்களிடம் கேட்க விரும்புகிற கேள்வி இதுதான். காமாட்சியின் எச்சரிக்கைக்கு உங்களுடைய ரியாக்ஷன் என்ன?''

விஜேஷ் சிரித்தான். ''அவளுடைய எச்சரிக்கையை நான் குப்பைக் கூடைக்கு அனுப்பியாயிற்று. உங்களுடைய சகோதரன் ஃப்ரெட்ரிக் என் உயிர் நண்பன். எனக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவன். நியூயார்க்கில் நல்ல வேலை கிடைத்து போகப்போகிறேன் என்று தெரிந்ததும், அங்கே ஒரு வீட்டை வாங் கும் யோசனையை அவன்தான் சொன் னான். அதற்கேற்றாற்போல் ஒரு பழங் கால வீடு உடனடியாக விற்பனைக்கு இருக்கிறது என்று நீங்கள் போனில் சொன்னதும், நான் உடனே புறப்பட்டு வந்துவிட்டேன். நீங்கள் ஒரு லாயர். அந்த வீட்டை விற்கக்கூடிய உரிமையான பவர் ஆஃப் அட்டர்னி உங்களிடம் இருப்பதால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.''

''நீங்கள் இப்படிப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது எந்தப் பிரச்னையும் இல்லாத வீடு. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, வீட்டை வாங்க முயற்சித்த இரண்டு பேர் இயற்கையான முறையில் இறந்து போயிருக் கிறார்கள். அதை ஒரு பெண் பொழுது போகாமல் கிளறிப் பார்த்து உங்களுக்கு கிலியை ஏற்படுத்த நினைத்து போன் செய்திருக்கிறாள்.''

''நான் அவளை மறந்துவிட்டேன் ஃப்ளோரா! எனக்கு அந்த வீட்டைக் காட்டுங்கள். முடிவாக ஒரு விலை பேசி அக்ரிமென்ட் போட்டுக்கொள்ளலாம். எனக்கு பேங்கில் லோன் சாங்ஷன் ஆன துமே ரெஜிஸ்ட்ரேஷன்!''

''அப்படியென்றால் அந்தக் காமாட்சி யின் எச்சரிக்கையைப் பொருட்படுத்த வில்லையா?''

''ஒரு சதவிகிதம்கூட! உங்கள் வீட்டுக்குப் போகும் வழியில்தான் அந்த வீடு இருப்பதாகச் சொன்னீர்கள் ஃப்ளோரா. போகும்போதே ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போய்விடலாமா?''

''வீட்டுக்குப் போய்க் குளித்துச் சாப்பிட்டு, சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு பிறகு போகலாமே?''

''இல்லை ஃப்ளோரா! எனக்கு விமானப் பய ணக் களைப்பு கொஞ்சம்கூட இல்லை. எதற்காக நியூயார்க் வந்தேனோ, அந்த வேலையை முதலில் பார்த்துவிடலாம்.''

''இன்னும் பத்தே நிமிடங்களில் அந்த வீடு இருக் கும் ஓல்ட் ப்ளாக் க்ரூவ்ஸ் ஏரியா வந்துவிடும்.''

''பிறகென்ன? பார்த்துவிட்டே போய்விடலாம்!''

கார் நெடுஞ்சாலையில் நான்காவது டிராக்கில் ஓர் இலவம்பஞ்சுத் துணுக்காகப் பறந்தது. நியூ யார்க்கின் பிரமாண்டமான கட்டடங்கள் இப்போது காணாமல் போயிருக்க, தொலைவில் மலைகள் நீல நிற பென்சிலால் கிழிக்கப்பட்ட கோணல்மாணல் கோடுகளாகத் தெரிந்தன.

விஜேஷ், ஃப்ளோராவிடம் ஏதோ பேச முயல, அவனுடைய செல்போன் ரிங்டோனை வெளியிட் டது. எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தான். புது நம்பர். செல்போனைக் காதுக்குக் கொடுத்து, ''யெஸ்'' என்றான்.

''நான் காஞ்சிபுரம் காமாட்சி. என்ன முடிவு பண்ணியிருக்கீங்க விஜேஷ்?''

''ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்துக்குள்ளே பூந் துட்டுப் பேசறவங்களை நான் நம்பறது இல்லை. ஃப்ளோரா இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த வீட்டைக் காட்டப்போறாங்க. நான் பார்க்கப் போறேன்.''

காமாட்சி சிரித்தாள்.

''என்ன சிரிக்கிறே?''

''வலிது... வலிது... விதி வலிது! இப்ப சிரிச்சது நானில்லை. உங்க முதுகுக்குப் பின்னாடி இருக்கிற விதி!''


No comments: